Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, January 1, 2014

வரமாய் வந்தருளாயோ...






தன்னிலையில் இயங்கா இன்ப மோன நிலை
முன்னிலையில் இயங்கும் மாயா பெரும்சக்தி
முரணாய் இரண்டாய் பலவாய் தோன்றிடும்
அரணாய் அறிவாய் அனைத்துமாய் ஆனவளே
சரணாய் புகுந்திட்டேன் மாயைத்திரை எரித்து
பரமாய் உணர்வாய் வரமாய் வந்தருளாயோ



நவீன மாமாக்கள்...!!







கல்லாத கல்வித் தந்தைகளிடம் 
இல்லாத இலட்சுமி கடாட்சமா..? 
சரஸ்வதியின் அருள் 
தமக்கு கிட்டாவிடினும் 
பிறருக்கு கிட்ட தரகராய் இருந்து 
இலட்சுமியின் அருள்
நிரம்பப் பெற்றவர்கள்...!!
கலை மகளை விலை மகளாக்கி
கல்லா கட்டும் நவீன மாமாக்கள்...!!

யாவுமாகி நிற்கின்றாய்..






பலவாகத் தோன்றுவனவெலாம் ஒன்றே எனில்
அதுவும் உங்கள் உணர்வே எனில்
விரும்புவதும் வெறுப்பதும் உங்களையே அன்றோ..?
உங்களையே உங்களால் வெறுக்கவும் கூடுமோ..?


சாத்தான் சிரித்தான் சத்தமாக....!!






சாத்தான் சிரித்தான் சத்தமாக....!!

மகனின் பிறந்த நாளில் செய்த 
நெய்க் கேசரியை நீரிழிவைக் காட்டி
கண்ணில் காட்டாத மனைவி 
தொலைக்காட்சித் தொடரில்
மூழ்கியிருந்த வேளையில்
அடுப்படியில் அடங்கா ஆசையுடன்
ஒரு கரண்டியளவு எடுத்து சுவைத்த போது...

வேண்டாம் விடுங்க உடம்பெல்லாம் வலியென
மனைவி தடுத்த போதும் வெறி கொண்டு
குதறி கதறிட சுகித்த போது....

கோடானு கோடி மக்கள்
ஒரு வேளை உணவுமின்றி
பட்டினியில் வாட.....
வறுமையைப் போக்க
பயன்பட வேண்டிய
அரசு பணம் ஊழலில்
மடை மாற்றம் செய்யப் பட்டு
அரசியல் வாதியின் ஸ்விஸ் வங்கிக்
கணக்கில் வரவு வைக்கப் படும் போது....

ஆண் குழந்தை ஒன்று வேண்டுமென
பத்து பெண் குழந்தை
அடுத்தடுத்து பெற்றபின்னும்
ஆசையுடன் அடுத்தொரு முயற்சியாக
அள்ளியணைக்கும் இணைகளின்
காதல் போர் முடிவின் போது....

சாத்தான் சிரித்தான் சத்தமாக....!!

உயிர் தின்னும் சிரிப்பு









உயிர் தின்னும் புன் சிரிப்பை
போட்டி போட்டு சிந்தும்
உன் இதழ்களும் விழிகளும்
என்னை முழுதாய் விழுங்கி
உன் வசமாக்கியதோ...!!


உறங்காத நினைவுகள்





ஆழ்துயிலில் என்னோடு
உன் நினைவுகளும்
ஓய்வு கொள்கின்றன
என் உணர்வு மட்டும்
விழித்திருக்கிறது உன்னோடு...!!



நெஞ்ச மதை வீடாகக் கொள்வாயோ







மூடாத நீள் விழிகள் உச்ச விழிப்பினிலே
பாடாத தேனீ ஆடாத செந்நெல் பரவசமாகிட
வாடாத சீவரெலாம் வாழ்த்தித் துதித் திருக்க
தேடாத திரவியமே தேமதுர தீஞ் சுவையே
நாடாத நெஞ்ச மதை வீடாகக் கொள்வாயோ

கடைசி வரி தோணல எதை வேணாலும் எழுது....!!








காதலில் காமமா
காமத்தில் காதலா
எது எனை உன்பால் ஈர்த்தது
புரியாத குழப்பத்தில் நான்
விடையாய் கடைசி வரி தோணல
எதை வேணாலும் எழுது....!!






நமக்குள் ஒரு நரகாசுரன்







நமக்குள் ஒரு நரகாசுரன்
அணு அணுவாய் சிதைக்கின்றான்
சோம்பல், பொய்மை, பொறாமை
வெறுப்பு, சினம், தன்னலம்
பொருந்தாக் காமம், பேராசை
இன்னும் பல கோர முகங்களுடன்
நம் சுயத்தை மறைத்து
மரத்துப் போன நம்மை
கொஞ்சம் கொஞ்சமாய்
ருசித்துப் புசிக்கின்றான்
பலவீனமான நம்மால் ஆவதென்ன?
உயிரின் உயிராய் உள்ளுறையும்
பேரறிவுப் பேருணர்வை
சரண்புகுவோம் சடுதியிலே
உள்ளுறையும் பேரொளியில்
இருள் பரப்பும் நரகாசுரன்
இருக்குமிடம் தெரியாமல்
இல்லா தொழிந்திடுவான்
தீப ஒளி நாளாம் தீபாவளி நாளில்
இல்லமெனும் அகம் மட்டுமல்ல
உள்ளமென்னும் அகத்தினிலும்
ஞான தீபம் ஏற்றிடுவோம்
நமக்குள் ஒரு நரகாசுரன்
மரணிக்கும் மகிழ்ச்சியினை
மனம் மலர கொண்டாடிடுவோம்...!!


குறு நகை








உன் குறு நகையின் முன்
உலகின் சிறந்த கவிதைகள் கூட 
வசீகரம் இழந்து 
வெற்று வார்த்தைகளாகி விடுகின்றன...!!

இன்றே உடை...!






உடை..!
உன்னுள் தோன்றும் 
எதிர்மறை எண்ணங்கள்
ஒவ்வொன்றாய் உடை..!
கோபம் உடை..!
சாதி, மொழி,மத வெறிதனை உடை...!
பொறாமை, பொய்மை உடை...!
சூதும் வாதும் உடை..!
உடல் தரிக்கும்
உடையை விட
உள்ளம் தரிக்கும் உடை
வசீகரமாகட்டும்...
அன்புடை பண்புடை
மானுடம் மலர்ந்திட
மிருக இயல்பை
இன்றே உடை...!




மரணம் வென்று காதலாய் வாழ்வோம்...!!








உயிரும் உளமும்
விழியொடு பொருந்த
காந்தம் ஈர்க்கும் இரும்பாய்
விழியில் விழுந்து
உயிரில் உணர்வில்
மூச்சில் கலந்தவனே
நானே நீயாகிப் போனதால்
வீணே இன்னொரு உடலில்
நீ எதற்கு...?
வா...உடலால் உணர்வால்
உயிரால் இரண்டற்று
ஒன்றாகித் திளைப்போம்...!
மரணம் வென்று
காதலாய் வாழ்வோம்...!!

மரணம் முற்றுப் புள்ளியல்ல...








வாழ்வின் முற்றுப் புள்ளி மரணமதை 
சற்றுத் தள்ளி வைத்திடவே 
விருப்பம் எல்லோருக்கும்..
முக்காற் புள்ளியாய் 
மரணத்தின் பின்னும் 
வாழ்க்கை தொடர்வதாய் கேட்டிருந்தாலும்
மரணமிலா வாழ்வே இயல்பென்பதால்
இல்லாது போதல் என்பதே இல்லாது போய்விட
நில்லாது தேடிடும் வாழ்க்கைப் பயணம்..!!
முற்றுப் புள்ளி என்பதே சற்றுத் தள்ளி
மாய்மாலம் செய்யும் கானல் நீரே...
மரணம் முற்றுப் புள்ளியல்ல...
சற்றுத் தள்ளிப் பெறும் ஆசுவாசம்...!!



ஈரம் காயாத நினைவுகள்








காலத்தின் ஓட்டத்தில் 
காணாமல் போயின..
நீயும் நானும் சிறு வயதில்
நெருங்கிப் பழகிய உயிர் நேசம்
நினைவுகள் மட்டும் பசுமையாய்...
காலம் நேசத்துக் குரியவர்களை
இடம் மாற்றி வைத்துச் செல்கிறது..
ஆனாலும் இதயத்தின் ஒரத்தில்
இன்னமும் இருக்கிறாய்...
ஈரம் காயாத நினைவுகளாய்...!!



முற்றுப் புள்ளி ..சற்றுத் தள்ளி..





காதலில் ஏது முற்றுப் புள்ளி..?
ஊடலால் சற்றுத் தள்ளி
ஊடலுக்கு வைப்போம்
முற்றுப் புள்ளி கூடலில்...!!

சல்யூட் சச்சின்






 சிலர் தொட்டதெல்லாம்
பொன்னாகும்
இவர் மட்டை பட்டதெல்லாம்...
ரன்னாகும்....
இவர் தோற்றத்தில் தான் வாமனர்
இவர் மட்டை சுழற்றும் போதிலோ
ஓங்கி உலகலந்த உத்தமர்
பாரதத் தாயின் மணி மகுடத்தில்
என்றும் மின்னும் வைரம்
மட்டைப் பந்தாட்டம்
என்பதன் மறு பெயராய்
வாழ்ந்திட்ட தெண்டுல்கர்
உனக்கு ஓய்வென்பதே இல்லை..
இனிவரும் கிரிக்கெட்டர்களின்
உந்து சக்தியாய் என்றென்றும்
நிலைபெறும் நின் பெயர்..
வாழ்க சச்சின்...
கடைசி கிரிக்கெட் இரசிகன் உள்ளவரை...!

 

அமுத மழை....





மேகக் காதலனைக்
கரம்பற்றிய மகிழ்ச்சியில்
வானமகள் வடிக்கும்
ஆனந்தக் கண்ணீராய்
பூமகளின் உயிர் வளர்க்கும்...
அமுத மழையே...!!
மாதம் மும்மாரி பொழிந்த நீ
ஆண்டின் சில நாட்கள் மட்டும்
அரிதாகிப் போனதென்ன..?
அகத்திற்கு அரிதாரம் பூசாத
அன்பு ததும்பி வழியும்
அன்பர்கள் அரிதாகவே
காணக் கிடைப்பதாலா..?

வானவில்லைக் காணவில்லை..





வானவில்லைக் காணவில்லை....
வானத்தை வில்லாய் வளைப்பேன்
என வாக்களித்த அரசியல்வாதியை
நம்பி வாக்களித்த மக்களுக்குத் தெரியுமா..?
வான வில்லை மட்டுமல்ல...
வனங்களையும் வளங்களையும்
கொள்ளையிட்டு மழை பொய்க்கச் செய்து
கழனிகளைக் கட்டாந்தரையாக்கி
கட்டடங்கள் எழுப்பி விற்று
கட்டுக்கடங்காமல் சொத்து சேர்த்த
அரசியல்வாதி களெல்லாம்
சந்ததிக்கு விட்டுச் செல்வது
சோத்துக்கு வழியத்த சொத்தை உலகம் தானே...
சேர்த்த சொத்து பசியாற்றுமா..?
செத்தபின்னே சொத்தெதற்கு..?
பத்தடி சுடுகாட்டில் பத்தாதா...?



காலம் வென்ற காதல்..!!





அவள் வாழ்க என்றாள்
காதல் தானே என்றான்
அவன் ஒழிக என்றான்..
காமம் தானே என்றாள்..
இல்லை...காதல் இல்லா ...
காமம் என்றான் அவன்..
அவர்கள் வாழ்ந்தார்கள்..
கண நேர காமமாய் அல்ல;
காலம் வென்ற காதலாய்...!!


பிரியத்தைப் போல பெரும் கொடுமை யில்லை..



பிரியத்தைப் போல
பெரும் கொடுமை யில்லை..
பிரியத்தை சொல்லில் செயலில்
உணர்வில் காட்டும்
பிரியத்திற் குரியோர் பிரிகையில்...
நினைவிலும் உயிரிலும்
உணர்விலும் மூச்சிலும்
கலந்து வதைக்கும்
பிரியத்திற் குரியோரின்
பிரியத்தைப் போல்
பெரும் கொடுமை யில்லை....!!