Wednesday, July 24, 2013

ஆவேச ஆலிங்கனம்..



காற்றும் மரமும் முரட்டுக்
காதலொடு கொள்ளும் ஆவேச
ஆலிங்கனத்தில் சிலிர்த்துக்
குலுங்குகிறது மரத்தின் தேகம்
இலைகளின் அசைவுகளோடு....!!

பனியிலும் வியர்க்கிறோம்

  


இருவர் ஒருவராகிப் பின்னிப்
பிணைந்திட்டப் பொழுதுகளில்
காற்றும் நாகரிகம் கருதி வெளியேறி
நெருக்கத்தை இறுக்கமாக்குகிறது.
அதனால் தான் பனியிலும் வியர்க்கிறோம்
இன்பத் தேணுண்டு கிறங்கிக் கிடக்கையிலே...!!

குளிர் தென்றல்



குளிர்ச்சியும் மென்மையும் இதமும்
உன்னைத் தீண்டித் தழுவிய பின் தான்
தென்றலுக்கும் உரிய இயல்பானதோ....!!

அலை பாய்கிறது மனம்...!!



உன் கார்குழல் காற்றில் அலைபாய
இதழொடு விழியும் கள்ளமின்றி சிரிக்க
புயல் வீசும் கடலில் அலைபாயும்
நாவாயாய் அலை பாய்கிறது என் மனம்...!!

காற்றும் கர்வம் கொள்கிறதடி...!!



உனைக் குறித்த என் தேனூறும்
நினைவலைகள் காற்றில் கலந்திட
பிரபஞ்சத்தையே வென்று தன்னுள்
அடக்கியது போல் காற்றும் கர்வம் கொள்கிறதடி...!!

காற்றும் பிரிக்காத நெருக்கம்



உயிர்கள் இடம் மாறும்
உன்மத்த உன் அணைப்பில்
காற்றும் வெட்கத்தில் காணாமல் போனதுவோ...!!

கனவாய் மலர்கிறது...!!



நின் நினைவுகளைச் சுமந்து
களைத்து கண்ணுறங்கும் வேளையிலும்
நினைவுகள் மடலவிழ்ந்து கனவாய் மலர்கிறது...!!

கண் பேசும் கவிதை



உன் கண் பேசும் கவிதைகளின் முன்
என் எல்லாக் கவிதைகளும் வெற்று
வார்த்தைகளாய் வசீகரமிழந்து போகின்றன...!!

இறை உணர்வே காதல்



பிறப்பு இறப்பில்லாத இறை உணர்வே காதல்
நிறை நிலையில் தூய இறை உணர்வாம்
பேரன்பே மானிடருள் வாத்சல்யமாய் பாசமாய்
நேசமாய் பக்தியாய் இறங்கிப் பரிணமித்து
காலாதீதத்தில் நிறை நிலையாய் முழுமையுறுகிறது
எல்லையிலா நித்தியப் பேரன்புப் பெருவெளியில்....!!

என்னுள் ஒளிவெள்ளம்..!!



உன் விழிகளில் தெறித்த மின்சாரம்
என்னுள் பாய்ந்த அதிர்ச்சியில் மயங்கிடினும்
மறுகணம் பிரகாசமாய் என்னுள் ஒளிவெள்ளம்..!!

சிலையானேன் நான்..



உன் அழகைக் கண்டதும் திகைத்துப் போய்
என் திசுக்களின் அணுக்களில் ஒரு கணம்
உயிரியக்கம் நின்றுவிட சிலையானேன் நான்...!!

யாரைப் புகழ்வேன்



யாரைப் புகழ்வேன் சிலையென
அழகுற மிளிரும் உனைப்
படைத்த பிரம்மனையா..
கருவியாக இருந்த உன் பெற்றோரையா ...
அழகு என்ற சொல் கூட உன் அழகை
விவரிக்கும் போது மட்டுமே அழகாகிறது...!!

சாஸ்வதமான காதல்



காதலுக்கும் காதல் பேசும் கவிதைக்கும்
தோல்வியோ மரணமோ இல்லை.
காதல் கடவுளின் உணர்வு வடிவம்.
கடவுளைப் போல காதலும் சாஸ்வதமானது..!!

காதலும் கவிதையும்



காதலும் கவிதையும் துணையை நினைந்து அகத்தில்
ஒருமுகப் படும் போது மட்டுமே அகப்படுகிறது.
அகத்தில் ஒருமுகப்படும் போது அகத்திலுறையும்
சிவத்தில் இலயிப்பதால் இறையுணர்வாம் காதலும்
அது படடைக்கும் கவிதையும் பிறந்து பெருவேகத்தோடு
கரைபுரண்டோடும் நதி பெருங்கடல் நடுவே கலந்து
அமைதி கொள்வது போல் பேரமைதியில் சுகிக்கிறது....

கறபனைச் சிறகுகள்



என் கற்பனைக்கு
சிறகுகள் தந்து
கவி வானில்
பறக்கச் செய்தவள் நீ...!!

காற்றினைத் தூது விட்டேன்




காற்றினைத் தூது விட உனை
இங்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டு
நம் இருவரின் வெப்பப் பெரு மூச்சின்
வெம்மை தாங்காது தூரப் போய்விட்டதோ...!!

நான் நானாக இல்லை.




நீ இல்லாத பொழுதுகளில்
நான் நானாக இல்லை.
என்னை நானாக வைத்திருப்பதே நீ தான்.
எனக்கான பிம்பத்தைக் கட்டமைப்பவளும் நீயே....!!

நினைவுகளில் நீங்காது வேண்டும் நீ....!!






என்னுள் வந்தாய்...
என் நினைவுகளில்
உன் கரம் கோர்த்து
உன் சுவாசம் உண்டு
உன் அணைப்பின்
கதகதப்பில் திளைத்து
உன்னோடு கணப் பொழுதும்
பிரியாது வாழும் பெறும்பேறில்
உண்ண மறந்து உறங்க மறந்து
இடை நூலினும் மெல்லியதாய் ஆயிடினும்
நினைவுகளில் நீங்காது வேண்டும் நீ....!!

நீயின்றி அமையாது என் உலகு...!!




நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அமையாது என் உலகு...!!

# கருங்குளம் மா.முருகன்

ஏங்கித் தவிக்குது மனசு




தமக்குள் குவிந்து
தவமாய் தவமிருந்து
மலர்ந்து மணம் பரப்ப
தவியாய்த் தவிக்கும்
மொக்குகளின் ஏக்கம் போல்
உனைக் காண ஏங்கித் தவிக்குது மனசு....!!

விட்டில் பூச்சிகள்




கண்ணையும் கருத்தையும்
கவர்வன வெல்லாம்
வாழ்வில் ஒளியேற்றாது
நம்மைப் பொசுக்கிவிடவும் கூடும் என்பது
விளக்கொளியின் வசீகரத்தில்
வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளாய்
ஈர்ப்பில் இலயித்து வீழும் பலருக்கும் புரிவதில்லை.

புத்தன் முகத்தில் மீண்டும் புன்முறுவலைக் காண்பதெப்போ...?






   

துரோகத்தின் துணை கொண்டு
ஒரு இனம் கருவறுக்கப் பட்டுவிட்டது.
தொப்புள் கொடி உறவில் பூத்த தன்னல பதவி
அது தரும் ஊழல் பெரும் பணம், அதிகாரம் எனும்
துர்நாற்ற மலர்களாய் தமிழக அரசியல் வாதிகள்
அத்துர்நாற்ற மலர்களை மாலையாக்கி அணிந்த
தேசத்தைப் பீடித்த அன்னியப் பிசாசு இவர்களின்
துரோகத்தில் விளைந்த ஆயுதம் கொண்டு
தமிழ் இனத்தைக் கருவறுத்த
புத்தனைப் பின்பற்றுவதாகப் பிதற்றும்
போலி அஹிம்சாவாதிகளின் மாபாதகம் கண்டு
புத்தனும் இழையோடும் மெல்லிய
புன்முறுவலைத் தொலைத்து விட்டான்.
புத்தன் முகத்தில் மீண்டும் புன்முறுவலைக் காண்பதெப்போ...?
வீழ்ந்த தமிழ் இனம் மீண்டும் தன்மானத்தோடு
தலை நிமிர்ந்து சுதந்திரக் காற்றை சுவாசிப்பதெப்போ...?

# கருங்குளம் மா.முருகன்

தகிக்கும் பூமி




புவியெங்கும் படர்ந்த
பசும் மரக்காதலியரைக்
காணாத தவிப்பில் சூரியக் காதலன்
வெப்பப் பெருமூச் செறிகிறான்.....!!

# கருங்குளம் மா.முருகன்

கெஞ்சும் நெஞ்சம்




நீ குழந்தையை கொஞ்சினாய்
உன் விழிகளோ என்னைக் கொஞ்சின
உன் மலர் மடியில் குழந்தையென துஞ்ச
என் நெஞ்சம் வெட்கமின்றி கெஞ்சியது...!!

# கருங்குளம் மா.முருகன்

Friday, June 14, 2013

மனத் தவிப்பு..!!









விடை பெறட்டுமா என
என் விரல் கோர்த்து உள்ளங்கையில்
மெலிதாக அழுத்துகையில்
பிரிவை விரும்பாத உன் மனத் தவிப்பு
மெல்ல மெல்ல எனை ஆட்கொள்கிறது...!!



# கருங்குளம் மா.முருகன்

கற்றுத் தரும் காதல்

 


 



இன்பமும் துன்பமும்
தென்றலும் சூறாவளியும்
ஒன்றைத் தொடர்ந்து பிரிதொன்றாக
மாறி மாறி வருவதே வாழ்க்கை
என்பதை ஒரு கணம் வலி
மறுகணம் களி என காதல் கற்றுத் தருகிறது...!!

# கருங்குளம் மா.முருகன்

திறா மோகம்...!!







ஒன்றே ஒன்று எனக்
கேட்டுப் பெற்று முடிவிலாது
தொடர்ந்தும் தீர்வதில்லை
முத்தத்தின் மீதான மோகம்...!!

# கருங்குளம் மா.முருகன்

ஏங்கித் தவிக்கிறது மனசு...!!










பொங்கித் ததும்பும் உணர்வுகளை
உள்ளுக்குள் அடக்கவே நினைக்கிறேன்
ஆனாலும் அணை உடைந்து பீறீட்டுப்
பாயும் பெருவெள்ளமாய் பெருகுகிறது கண்ணீர்...
கரம் பிடித்து தோள் சேர்த்து ஆறுதலாய்த்
தட்டிக் கொடுத்து தழுதழுக்கும் குரலில்
கண்கள் பனிக்க தாயாய் தாங்கும்
உனைக் காண எத்தனை முறை வேண்டுமானாலும்
சிறு குழந்தையாய் கதறி அழுதிடவே
ஆசையுடன் ஏங்கித் தவிக்கிறது மனசு...!!

# கருங்குளம் மா.முருகன்

பார்வை அம்புகள்









உன் பார்வை அம்புகள்
குத்திக் கிழித்ததில் உன்
இதயப் பலூனில் காற்றாய்
நிறைந்திருந்த நான்
உன் சுவாசக் காற்றில்
கரைந்து கலந்து விட்டேன்

# கருங்குளம் மா.முருகன்

சூரியக் காதலன் ...பனிக் காதலி...!!





கதிரவனின் கிரணக் கரங்களின்
அணைப்பில் கரைந்து காணாமல் போய்விட
சூரியக் காதலனின் வரவிற்காய்
இரவெல்லாம் தவமிருந்தாள் பனிக் காதலி...!!

# கருங்குளம் மா.முருகன்

மாறாத நினைவலைகள்




கடலலைகள் ஓய்ந்தாலும் உனைக்
குறித்த நினைவலைகள் ஓய்வதில்லை
படைப்பும் பிரளயமும் என மாறி மாறி
பிரபஞ்சம் தோன்றி மறைந்தாலும்
நினைவலைகள் ஓய்வதில்லை
மாறாத பிரம்ம நிலை எய்தும்வரை...!!

# கருங்குளம் மா.முருகன்

யாண்டும் பேரின்பம்









தன்னில் சுகிக்கும் தவத்தில் நிறைவு கண்ட மனம்
இன்னும் வேண்டுமென எதையும் எதிர்பார்ப்பதில்லை
மண்ணும் பொன்னும் சமமெனும் ஞானம் வந்தால்
எண்ணம் யாவிலும் யாண்டும் பேரின்பம் நிறையாதோ...!!

# கருங்குளம் மா.முருகன்

துரத்தும் காதல்









நாளுக்கு நான்கு முறை சேர்ந்தாலும்
சலிக்காது எனை துரத்திக் கொண்டே யிருக்கிறாய்
கடிகாரத்தின் சின்ன முள்ளை துரத்தும் பெரிய முள்ளாய்...!!

# கருங்குளம் மா.முருகன்

பூகளீன் ஏக்கம்

 



பூக்களும் ஏங்குகின்றன
உன் தலையில் சரமாய்
தன்னை அலங்கரித்துக் கொள்ள...
அப்போது தாம் அவை
அழகு பெறுகின்றனவாம்....!!

# கருங்குளம் மா.முருகன்

அழகிய கவிதை




நீ மிக அழகு....கவிதை போல...
மீண்டும் மீண்டும் உனை வாசிக்கிறேன்
முழுதாய் புரிந்துகொள்ள...!!

# கருங்குளம் மா.முருகன்

சிரித்துக் கொண்டிருந்த பசுந்தளிர்...!!





 மண்ணை முத்தமிட்டு வீழ்ந்த
சருகின் மரண ஓலத்தை கேட்ட பின்னும்
இன்னும் வாழ்வேன் காலமெல்லாம் என நினைந்து
அழகாய் சிரித்துக் கொண்டிருந்தது பசுந்தளிர்...!!

# கருங்குளம் மா.முருகன்

புத்துலகில் புது உயிராய் பிறப்போம்




சக்தியும் சிவமுமாய் தாண்டவமாடிட
வாராயோ சித் அம்பலம்தனிலே
நினைவுகளின் சங்கமத்தில்
ஊழிக் கூத்திலும் உவகை கண்டு
பெரும் பிரளயத்திலும் ஒன்றாயொடுங்கி
புத்துலகில் புது உயிராய் பிறப்போம்
ஜீவ அமிழ்துண்டு மரணம் வென்று
நித்திய பேரானந்தத்தில் திளைப்போம் யாண்டும்...!!

# கருங்குளம் மா.முருகன்






இன்னொரு தளிர் துளிர்க்க...!!








மண் தந்த நீரில்
வளர்ந்த தளிரும்
காதலொடும் நன்றியொடும்
சருகாய் மண்ணில் கலந்திட...
மண்ணும் எற்றது உரமாய்
இன்னொரு தளிர் துளிர்க்க...!!

# கருங்குளம் மா.முருகன்

நீயும் உன் தேன் குரலும்








உனைக் காணா பொழுதுகளிலும்
உன் குரல் தேனிசையாய் எனக்குள் ஒலிக்கிறது.
நினைவுகளில் நீயும் உன் தேன் குரலும்
நீ என்னோடு இல்லை என்பதையே பொய்யாக்குகின்றன....!!

# கருங்குளம் மா.முருகன்

நினைவுப் பெருநதி








என்னுள் பிரவகிக்கும்
உன் நினைவுப் பெருநதியில்
நீந்திக் களிக்கிறேன் சந்ததமும்...!!

# கருங்குளம் மா.முருகன்

தின்னும் நினைவுகள்








உன் நினைவுகள் எனை
மெல்ல மெல்ல தின்பதை
உணரா வண்ணம் மரத்துப்
போய் விட்டேன் நான்...!!

# கருங்குளம் மா.முருகன்

தாலாட்டும் இசை

 





நீ இல்லா பொழுதுகளில்
உன் நினைவெனும் இசை
தாலாட்டுகிறது என்னை..
உன்னோடு இருக்கும்
பொழுதுகளிலோ நீ
என்னை நெஞ்சத்தில் தாலாட்டுகிறாய்...!!

# கருங்குளம் மா.முருகன்

கனவு மலர்ப் பாமாலை








கனவு மலர்களைக் கொய்து
உன் நினைவெனும் நாரில் தொடுத்து
பாமாலையாய் சூடுவேன் உனக்கு..
நினைவிலும் கனவிலும் என்னோடு
கரம் கோர்த்து நடக்கும் உனக்குத் தர
என்னைவிட அருஞ்சிறப்பாய் வேறெதுவும் உளதோ...?


# கருங்குளம் மா.முருகன்

சொல்லிலடங்கா சுகம்




சந்தை இரைச்சலிலும் தன்னுள் ஒடுங்கி
பிரபஞ்சத்தின் தோற்றுவாயைத் தேடி விரிபவன்
சொல்லிலடங்கா சுகத்தில் திளைக்கிறான்.
அமைதி தவழும் கானகத்தில் தனிமையில்
புலன்களின் வழியே புற உலகில் சஞ்சரிப்பவன்
தனக்குள் பேரிரைச்சலுடன் கொந்தளிக்கும்
பெருங்கடலாய் அலைமோதித் தத்தளிக்கிறான்...!!

# கருங்குளம் மா.முருகன்

மதமெனும் மாயப் பேய்




கீதையும் விவிலியமும் குரானும்
கரையானுக்கு உயிர் பிழைக்கச் செய்யும் உணவு.
மனிதர்களுக்கோ மதம் பிடித்து
உயிர் பறிக்கத் தூண்டும் கொலை வாள்...!!

# கருங்குளம் மா.முருகன்

Thursday, June 13, 2013

முப்பொழுதும் உன் நினைவுகளில்.....





முப்பொழுதும் உன் நினைவுகளில்
மூழ்கி யிருந்ததால் எனைக் கடந்து
போவோர் வருவோ ரெலாம் கண்கள்
நோக்கினாலும் கருத்தில் பதியவில்லை.....
ஏனடா சுரத்தே இல்லாமல் பித்தாயிருக்கிறாய்
என உயிர் நண்பன் உலுக்கியபின் தான்
நனவுலகம் திரும்பினேன்.
உன் நினைவுகளுக்குத் தான்
எத்தகைய வல்லமை..?
எனை முழுதாக மந்திரத்தில்
மயக்க முற்றவனைப் போல்
கட்டிப் போட்டு விடுகின்றனவே....!!

# கருங்குளம் மா.முருகன்

அன்புப் பெருமழை

 
 



நீ பேசாது தவிர்த்த பொழுதுகளில்
ஆவேசப் புயலாய் மையம் கொண்ட நான்
இதழோரத்தில் புன்னகை தவழ கண்களில்
ஒட்டுமொத்த காதலையும் தேக்கி நீ
கருணையுடன் கண்கள் சிரிக்க நெருங்குகையில்
அன்புப் பெருமழையாகி குளிர்ந்திட்டேன்....!!


# கருங்குளம் மா.முருகன்

அமாவாசை என்றும் எனக்கேது...?




இருண்ட என் வானில்
நிலவென வந்து ஒளி தந்தாய்
நீ இருக்க அமாவாசை என்றும் எனக்கேது...?


# கருங்குளம் மா.முருகன்

நினைவே என் மூச்சுக் காற்று

 




நின் நினைவே என்

மூச்சுக் காற்றானதால்
நின் நினைவிருக்கும் வரை
நான் இருப்பேன்.
பிரளயத்திலும் நின் நினைவிருக்கும்
நின் நினைவும் நானும்
தோற்றமும் முடிவுமிலாது
என்றென்றும் இருப்போம்....!!

# கருங்குளம் மா.முருகன்

கருணை மழை வெள்ளம்





உன் விழிகள் சொரிந்த
கருணை மழை வெள்ளத்தில்
என் மனதில் படிந்திருந்த கவலை
அழுக்குகளெல்லாம் அடித்துச் செல்லப்பட
வெள்ளை உள்ளத்தில் பேருவகை
நறுமணமாய் பரவி நிறைந்தது...!!

# கருங்குளம் மா.முருகன்